‘திட்மிட்டே வீடியோ மூலம் பொய் தகவல் பரப்பிய ராணுவ வீரர்?’ - காட்டிக் கொடுத்த ஆடியோ.. அம்பலமான உண்மை!

திருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் தனது மனைவியைத் தாக்கி, அநாகரிகமாக நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், அவர் திட்டமிட்டே பொய்த் தகவல் பரப்பியது தெரியவந்துள்ளது.
ராணுவ வீரர் பிரபாகரன்
ராணுவ வீரர் பிரபாகரன்PT Desk
Published on

திருவண்ணாமலை படவேடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தனது மனைவியின் கடையை காலி செய்வதில் உள்ள பிரச்சனை காரணமாக சிலர் அடித்து அவரது மனைவியை அவமானப்படுத்தியதாகவும், அவரை காப்பாற்றுமாறும் வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், இதனை காவல்துறையினர் மறுத்து விளக்கமளித்திருந்தனர். இந்நிலையில், ராணுவ வீரர் பிரபாகரன் பொய் தகவலுடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக உறவினர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

ராணுவ வீரர் பிரபாகரன்
‘முற்றிலும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்’- ராணுவ வீரரின் மானபங்க குற்றச்சாட்டுக்கு தி.மலை எஸ்பி விளக்கம்

அந்த ஆடியோவில், “நான் எந்த அளவுக்கு இறங்கி வேலை செய்கிறேன் என்பது இன்று மதியத்துக்குள் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டது; இந்த விஷயத்தை நான் பரவ விட்டுவிட்டேன். நாம் தமிழர், பாஜக என முக்கியக் கட்சிகள் வீடியோவை பார்த்துள்ளனர். 6 கோடி பேர் வரை வீடியோவை பார்த்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வருகிறது. இந்தப் பிரச்னையில் நீங்க கொஞ்சம் திரித்துச் சொன்னால் போதும். ‘என் தங்கையை அடித்தால் நான் வேடிக்கை பார்ப்பேனா’ என்று கேள். என் தங்கையை அடித்தவர்களை அடித்தேன் என்று சொல்; கத்தியால் குத்தியதைச் சொல்ல வேண்டாம். 20 பேரையாவது தயாராக வைத்திரு.

முதலமைச்சர் தனிப்பிரிவு, முக்கிய அரசியல் கட்சியினர் என்னிடம் பேசியுள்ளனர். திருவண்ணாமலை முழுவதும் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகிறது. நீங்கள் நடந்ததை ஒன்றுக்கு இரண்டாக திரித்துச் சொல்லுங்கள்; கத்தியால் குத்தியது விஷயம் இல்லை. என் மனைவியை அடித்த விவகாரம்தான் பெரிதாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியிடம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமம் ரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டடம் கட்டி படவேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வமூர்த்தி என்பவருக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9.50 லட்சம் அட்வான்ஸ் ஆக பெற்றுக்கொண்டு மாத வாடகையாக ரூ.3000க்கு விட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மேற்கண்ட குமார் இறந்துவிடவே, அவரது மகனான ராமு என்பவர் கடையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி மேற்படி செல்வமூர்த்தியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி செல்வமூர்த்திக்கு ரூ.9.50/- லட்சம் ராமு கொடுத்து விடுவது என்றும், அதைப் பெற்றுக்கொண்டு 10.02.2023ஆம் தேதியன்று செல்வமூர்த்தி கடையை காலி செய்வதென்றும் இருவருக்கும் எழுத்து மூலமாக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

அதன்பின்னர், செல்வமூர்த்தி ஒப்பந்தப்படி பணத்தையும் பெற்றுக் கொள்ளாமலும், கடையையும் காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார். ராமு பலமுறை முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே ஜூன் 10 காலை ராமும் அவரது குடும்பத்தினரும் மேற்படி கடையிடம் சென்று செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்து, கடையை காலி செய்யக் கூறியுள்ளனர். அப்போது, செல்வமூர்த்தியின் மகன் ஜீவா என்பவர் கத்தியால் ராமுவின் தலையில் தாக்கியுள்ளார். அந்த இடத்தில் ராணுவ வீரரின் மனைவியுமான மேற்படி செல்வமூர்த்தியின் மகளுமான கீர்த்தி மற்றும் அவரது தாயாரும் இருந்துள்ளனர். ராமுவிற்கு ஏற்பட்ட இந்த காயத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து ராமுவிற்கு ஆதரவாக, ’ஒப்பந்தப்படி கடையையும் காலி செய்ய மறுத்துள்ளீர்கள். கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள்’ என்று ஆவேசப்பட்டு கடையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள். இதுதொடர்பாக, இருதரப்பிலும் சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ராணுவ வீரர் வெளியிட்ட வீடியோ!

கடையை காலி செய்யக் கோரி தன்னுடைய மனைவியை ராமு என்பவர் உட்பட சிலர் தாக்கியதாக கீர்த்தியின் கணவரும் ராணுவ வீரருமான பிரபாகரன், ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ மூலம் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்துள்ளார்.

பிரபாகரன் விடுத்துள்ள அந்த வீடியோவில், ”திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் கடை வைத்துள்ள எனது மனைவியை, அவர் நடத்தி வந்த கடையை காலி செய்யக்கோரி 120 பேர் கும்பலாக வந்து கடையை சேதப்படுத்தியதோடு, மனைவியையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பிக்கு புகார் அனுப்பியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்” என மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

”மிகப்படுத்தப்படுகிறது” - திருவண்ணாமலை எஸ்.பி கொடுத்த விளக்கம்

இதுதொடர்பாக பேசியிருந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், “இந்த வழக்கில் பொதுமக்கள் ஆவேசப்பட்டு பொருட்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர, கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

இந்த விஷயம் முற்றிலும் மிகைப்படுத்தி கூறியுள்ள தகவல் என தெரியவருகிறது. இருப்பினும், இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.

இத்தகைய சூழலில் தான் ராணுவ வீரர் திட்டமிட்டு போலியான தகவலை வீடியோ மூலம் வெளியிட்டது தற்போது தெரியவந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com