திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக, இளம் பெண்கள் மாயம் எனும் செய்தி தொடர்கதையாகி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 60க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், சிறுமிகள் திருவள்ளூரில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போவற்கு காரணம் என்ன? இந்தச் சம்பவங்களுக்கு பின்னணிதான் என்ன? என்று பொதுமக்கள் மத்தியில் பரவலான ஒரு கேள்வி எழுந்தது. இது கடத்தலா? இல்லை தேர்வு பயமா? என்ற பல குழப்பங்களும் எழுந்தன. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் பரவ திருவள்ளூர் பெற்றோர்கள் மத்தியில் பதட்டம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் பெரும்பாலும், மார்ச் மாதம் பள்ளித் தேர்வுகள் முடிந்து, அதன்பிறகு விடப்பட்டுள்ள விடுமுறைக்கு பின்னர் தான் அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ள வழக்குகள் மூலம் தெரிந்தது. மார்ச் மாதத்திற்கு பிறகு மட்டுமே 40 பேர் காணாமல் போயுள்ளனர். வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது 40தான். ஆனால் புகார் கொடுக்காமலே நிறைய பெற்றோர் இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. காணாமல் போனவர்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி படிக்கும் பெண்கள்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கூறும் போது, ‘இதுபோன்று இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவம் திருவள்ளூர் மட்டுமின்றி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகம் நடைபெறுகின்றது. காணாமல் போனவர்களில் இதுவரை 90 சதவிகிதம் பேர் திருவள்ளூரில் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் காதல் விவகாரம் காரணமாக காணாமல் போனவர்கள் தான்’ என்று கூறினார். ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? உண்மையிலேயே இதுதான் காரணமா? என்ற சந்தேகங்களும் எழுந்தன. இதுதொடர்பாக புதிய தலைமுறை தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தது.
காவல்துறை தரப்பில் இது ஒரு சாதாரண நிகழ்வுதான் என்ற அடிப்படையில் கூறப்பட்டாலும், இதுபோன்று பெண்கள் காணாமல் போவதில் வேறேதும் காரணம் இருக்கலாம் என எண்ணி புதிய தலைமுறை இணையதளக்குழு களத்தில் இறங்கியது. திருவள்ளூரில் உள்ள பல பள்ளிகளுக்கு பயணப்பட்டோம். ஆனால் பெருவாரியான மாணவிகள் பேச மறுத்துவிட்டனர். மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் பேச மறுத்துவிட்டனர். அவர்கள் வீட்டுப் பெண்களை சந்திக்கக் கூட விடவில்லை. கடைசியில் ஒருவழியாக ஈக்காடுகண்டிகை சேர்ந்த மீட்கப்பட்ட பெண் ஒருவர் பேச சம்மதித்தார். அதுவும் பெயர் குறிப்பிடக்கூடாது, புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனைகளுடன் அவர் பேசத்தொடங்கினார்.
அந்தப் பெண் பேசும் போது, ‘நான் சிறுவயது முதலே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். கல்லூரியில் படித்து பட்டம் பெற வேண்டும் என்று கனவு இருந்தது. எனது ஆசிரியர்களும் என்னை ஊக்கப்படுத்தி வந்தனர். ஆனால் எனது வீட்டில் நான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதில் விருப்பமில்லை. அவர்கள் என்னை விரைந்து திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். 10ஆம் வகுப்பை முடிக்கும் முன்னரே என்னை பெண் பார்க்க சில மாப்பிள்ளைகள் வந்து சென்றனர். இதனால் எனக்குள் அச்சம் அதிகரித்தது. நான் பெரும் மன உளைச்சளுக்கும், குழப்பத்திற்கு ஆளானேன். 10ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் அந்தப் பயம் எனக்கு மேலும் அதிகரித்தது. விடுமுறையில் தினமும் பயந்துகொண்டே இருப்பேன். யார் இன்று பெண் பார்க்க வருவார்களோ என்ற கலக்கத்திலேயே இருந்தேன். இந்நிலையில்தான் வீட்டை விட்டுச் செல்ல முயற்சித்தேன். நான் யாரையும் காதலிக்கவில்லை. இருந்தாலும் வெளியே சென்று வேலை பார்த்து படிக்கலாம் என முடிவு செய்து புறப்பட்டேன். ஆனால் அதற்குள் என்னை காவலர்கள் பேருந்து நிலையத்தில் மீட்டுவிட்டனர்’ என்று கண்கள் கலங்கியபடி கூறினார்.
சிறுவயதில் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் திருவள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாகவே இருக்கிறது. அதற்கான புள்ளிவிபரங்களும் இதை உறுதி செய்கின்றன. ஆனால் அது மட்டுமே காரணமா என காணாமல் போய் மீட்கப்பட்ட மற்றொரு இளம் பெண்ணான ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் பேசும் போது, ‘எனது அக்கா கல்லூரி படிக்கும் போது ஒருவரை காதலித்து வீட்டை விட்டுச்சென்று விட்டார். இதனால் என்னை 16 வயதிலேயே திருமணம் செய்து கொடுக்க என் வீட்டில் முடிவுசெய்தனர். இதற்காக என் உறவினர் ஒருவரை பார்த்தனர். ஆனால் அவருக்கு 39 வயதாகிறது. எனக்கு அவர் அப்பா போல இருக்கிறார். எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கிறது. நான் எப்படி அவரை திருமணம் செய்துகொள்வேன். அதான் வீட்டை விட்டுச்சென்று விட்டேன் ஆனால் இந்த போலீஸ்காரங்க என்னை கண்டுபிடிச்சிட்டாங்க’ என்று கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள மரத்தடியில் இருந்த சிலரிடம் தகவல் கேட்டோம், ‘அவர்கள் கூறும் இதுபோன்ற சம்பவங்கள் திருவள்ளூர் பகுதியில் இயல்புதான் தம்பி. எல்லாரும் பெண் பிள்ளையை பெத்துட்டு வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்காங்க. இதுனாலயே நிறையா பெற்றோர் சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சுடுறாங்க. அதுவும் இல்லாம தங்களோட சொந்தக்கார பெண்ணுக்கு திருமணம் ஆகிடுச்சு, நம்ம பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகலயேனும் வயசு பாக்காம திருமணம் செஞ்சுடுறாங்க. சிலர் குழந்தையில்லாத அவங்க உறவினருக்கு 2ஆம் தாரமா கல்யாணம் பண்ணி வச்சுறாங்க. அதுனாலதான் நிறைய பெண் புள்ளைங்க வீட்டை விட்டே போயுடுறாங்க.’ என்று சாதாரணமாக கூறினார். மேலும் பேசிய நபர்கள், ஸ்கூல் , காலேஜ் லீவுலதான் பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சரியான நேரம், யாரவது ஊருல இருக்க பசங்களா பெரியவங்க பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க என்றார்கள். இங்கு பெண்ணின் சம்மதம் என்பது எந்தத் தருணத்திலும் கேட்கப்படுவதே இல்லை என்பதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட பல பெண்கள், சிறுமிகளை தொடர்பு கொண்டு முகம் காட்டாமல் பேச சொன்னோம். 14 பேரிடம் பேச முடிந்தது. அனைவரும் சொன்ன காரணம் திருமணம்தான்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விபர கணக்குப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 500க்கு அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆண்டுக்கு 100-150 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுக்க 1163 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும், அது தொடர்வதை தவிர்க்க முடியவில்லை என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெறுவதையும், ஒரு ஆண்டுக்கு அது 3-5 சதவீதம் வரை உயர்வதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தத் தகவல்களை எல்லாம் ஒருங்கிணைத்து பார்க்கும் போது திருவள்ளூரில் பெரும்பாலும் இளம் பெண்களும், சிறுமிகளும் காணாமல் போவதற்கு குழந்தை திருமணம்தான் முக்கிய காரணம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையிடம் பேசிய போது, ‘நாங்கள் குழந்தை திருமணம் என புகார் வந்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ உடனே தடுத்துவிடுகிறோம். ஆனால் சில பெற்றோர் உண்மையை கசியவிடாமல் மறைத்து ரகசிய திருமணங்கள் செய்துவிடுகின்றனர். இருப்பினும் நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறினர்.