சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தங்களின் விளை நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் வழங்கி வருகின்றனர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய 4 ஏரிகளே சென்னை மக்களின் குடிநீர் ஆதாரம். இவற்றில் பூண்டி தவிர மற்ற 3 ஏரிகளும் முற்றிலும் வறண்டு விட்டன. பூண்டி ஏரியும் அடுத்த சில நாள்களில் வறண்டுவிடும் நிலையில் உள்ளது. அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அதனை சமாளிக்க தேவையான மாற்று ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது சென்னை குடிநீர் வாரியம்.
அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை அணுகி அவர்களின் வயலில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரைப் பெற்று சென்னை மக்களுக்கு தருவதே அந்த மாற்று ஏற்பாடு. அதன்படி, மாகரல், கீழானூர், அத்திங்காவனூர், மோவூர், சிறுவானூர், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகை தரப்பட்டாலும், பணத்தை விட சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதில்தான் தங்களுக்கு மகிழ்ச்சி என்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்.
சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவை 850 மில்லியன் லிட்டர். இவற்றில் பெரும்பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தே கிடைக்கிறது. அங்குள்ள ஏரிகள் வறண்டாலும், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் உள்ளத்தில் ஈரம் உள்ளது. சென்னையில் தண்ணீரில்லாமல் தவிக்கும் மக்கள் வாய்க்கு தண்ணீர் கொடுப்பவர்களாக தற்போது திருவள்ளூர் விவசாயிகள் உள்ளனர்.