திருவள்ளூர்: 10 நாட்களாக குப்பை அருகே சுருண்டு கிடக்கும் ஆதரவற்ற முதியவர்!

திருவள்ளூர்: 10 நாட்களாக குப்பை அருகே சுருண்டு கிடக்கும் ஆதரவற்ற முதியவர்!
திருவள்ளூர்: 10 நாட்களாக குப்பை அருகே சுருண்டு கிடக்கும் ஆதரவற்ற முதியவர்!
Published on

ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக குப்பையோடு குப்பையாக கிடக்கும் அவலம் திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் நடந்துள்ளது. சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தர்மராஜா கோயில் அருகில் 80 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பாக, ஒரு சாக்குப்பையில் கிடத்தி விட்டு சென்றிருக்கிறார்கள் அவரது உறவினர்கள். சுயநினைவு இல்லாத அவர், எழுந்து நிற்க, நடக்க, படுக்க முடியாமல் தவித்துவருகிறார்.

 கடந்த 10 நாட்களாக கொட்டும் பனியில் உண்ண உணவின்றி படுக்க வசதியின்றி கிடக்கும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

 இந்த முதியவரின் நிலையை கண்ட சமூக ஆர்வலர் ஓருவர் 108 அவசர ஊர்திக்கு எடுத்து கூறியுள்ளார். ஆனால் அவர்கள் விபத்து, மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டால் தான் நாங்கள் உதவி செய்ய முடியும் இதுபோன்ற ஆதரவற்ற முதியோருக்கு எங்களால் உதவ முடியாது என தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து திருத்தணி வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

முதியவர் படுத்துக் கிடக்கும் சாலையில், சிவன் கோயில், திரௌபதி அம்மன் கோயில், வேளாண்மை துறை அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், உதவி மாவட்ட கல்வி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. பல்வேறு வேலைகளுக்காக தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த 10 நாட்களில் யாருமே கண்டுகொள்ளாமல் இந்த முதியோர் குப்பையோடு குப்பையாய் இருப்பது தான் பெரும் சோகம்.

முதியவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com