செய்தியாளர்: B.R.நரேஷ்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலைமை அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் உள் நோயாளிகளாக 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு இரவு நேரத்தில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதன் நீட்சியாக, தூய்மை பணியாளராக வேலை பார்ப்பவர்கள் இரவு நேரத்தில் ஆண்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு ஊசி போட்டு, குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுபற்றிய வீடியோவொன்று தற்போது சமூக வலைதளதில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோ, திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் கல்பனாவிடம் நாம் கேட்டபோது... “இச்சம்பம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். இச்சம்பவம் நடைபெற்ற போது பணியில் இருந்த செவிலியரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது. இதுபோன்று தூய்மைப் பணியாளரை பணியில் ஈடுபடுத்தியது தவறு என்பதால், சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட உள்ளது” என தெரிவித்தார்.