திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள், “இங்கு இயங்கி வரும் மதுபான கடையால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. மது குடிப்போர், பாட்டில்களை விவசாய நிலத்திலும் சாலைகளிலும் வீசிச் செல்வதால் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. அதேபோல் மதுபானக் கடைக்கு அருகிகே அங்கன்வாடி மையம் பள்ளிக் கூடங்கள் மற்றும் கோவில்கள் அமைந்துள்ளதால், பள்ளிக் குழந்தைகள் அவ்வழியாக செல்ல அச்சமடைந்துள்ளனர்” என்று கூறுகின்றனர்.
அத்துடன், “பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. 24, மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதால் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. மதுபானக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இன்று அப்பகுதி பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். கோஷமிட்டபடி ஒருபுறம் பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், போலீசாரின் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.