''இப்படிக்கு... தரணேஷ் நண்பர்கள், 3-ம் வகுப்பு'' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த ஆட்சியர்!

''இப்படிக்கு... தரணேஷ் நண்பர்கள், 3-ம் வகுப்பு'' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த ஆட்சியர்!
''இப்படிக்கு... தரணேஷ் நண்பர்கள், 3-ம் வகுப்பு'' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த ஆட்சியர்!
Published on

திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இன்னமும் எவ்வளவோ இடங்களில் பள்ளிக்குச் செல்வது என்பது பெரும் போராட்டமாகவே இருக்கிறது. சாலை வசதி இல்லாமல், பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் மாணவர்கள் பலர் உண்டு. இன்னும் சிலர் ஆற்றைக் கடப்பதும், குளத்தை தாண்டுவதும் என உயிரையே பணயம் வைத்து பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி பள்ளிக்குச் செல்வதையே போராட்டமாக அனுபவித்த ஒரு மூன்றாம் வகுப்பு மாணவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து 3-ம் வகுப்பு மாணவன் எழுதிய நன்றிக் கடிதம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மழலையின் கையெழுத்தில் அன்பு பொழியும் அந்த கடிதத்தை ''சிக்கினாபுரம் அரசு நடுநலைப்பள்ளியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் தரணேஷ் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்'' என்ற தலைப்புடன் மாவட்ட ஆட்சியரும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ அன்புள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, நானும் எனது நண்பர்களும் நடந்துதான் பள்ளிக்குச் செல்வோம். கஷ்டமாக இருக்கும். மழைக்காலங்களில் நாங்கள் செல்லும் ஓடை முழுவதும் தண்ணீர் போகும். அந்த ஓடையைத் தாண்டித்தான் செல்வோம். எங்கள் பகுதி அண்ணன்கள் சமூகவலைதளங்களில் உங்களிடம் பேருந்து வசதிகோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் உத்தரவின் பேரில் இன்னும் 10 தினங்களுக்குள் பேருந்து வசதி கிடைக்கும் என பணிமனை மேலாளர் உறுதியளித்துள்ளார். இது என்னையும், என் நண்பர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்கு நேரமிருந்தால் எங்களுக்காக வரும் பேருந்தை நீங்கள் துவக்கி வைக்க வேண்டும். உங்களை நேரில் காண ஆவலுடன் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மாணவனின் இந்தக் கடிதத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

(மாணவி சஹானா)

சமீபத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சஹானா என்ற 5 ஆம் வகுப்பு மாணவி, பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி இல்லை என புகார் தெரிவித்தார். இதனை அறிந்ததும் மாணவி சஹானாவை நேரில் சந்தித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து பேருந்து வசதியை கிடைக்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com