மத்திய பட்ஜெட்டில் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு எந்த சலுகைகளும் இல்லாததால் திருப்பூர் தொழிற்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “ தொழில்துறையினர் எதிர் பார்த்த ஜி.எஸ்,டி வரி குறைப்பு குறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லை என்று கூறினார். திருப்பூர் பின்னலாடைத்துறையினர் பெரிதும் எதிர்பார்த்த சிறிய அளவில் செயல்படும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி ரத்து குறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.
மேலும் திருப்பூர் பின்னலாடை துறை ஒரு லட்சம் கோடி இலக்கை எட்ட தேவையான எந்த அறிவிப்புகளும் இடம் பெறாதது ஏமாற்றமாக உள்ளதாகவும், சிறு குறு தொழில்கள் மீண்டு வர திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முன்பு 250 கோடி வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 25 சதம் வரை வரி தள்ளுபடி இருந்தது, தற்போது 400 கோடி என அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேச அளவில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவது டெக்ஸ்டைல் துறை, ஆனால் இத்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும் தொழிலாளர்களுக்கான விடுதி வசதி, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை, திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் ஏதும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம் சண்முகம் தெரிவித்துள்ளனர்.