திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 21 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில், எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரளா பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 5 பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பேருந்தின் மீது மோதியதாக தெரிகிறது.
இதேபோல், சேலம் மாவட்டம் நரிப்பள்ளம் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில், 5 பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டுவை சேர்ந்த 32 பேர், தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கோயில்களை தரிசனம் முடித்துக் கொண்டு, ராஜஸ்தான் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நரிப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள காளியம்மன் கோயில் மண்டபத்தில் ஓய்வு எடுக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக சுற்றுலா பேருந்தை கோயிலை நோக்கித் திருப்பியுள்ளனர். அப்போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நேபாளத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.