கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு கடை வியாபாரியை தாக்கியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு வரும் 23 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சிலையை வைப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அப்பகுதியில் வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் சிவா என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடையில் வசூல் செய்துள்ளனர். அப்போது சிவா 300 ரூபாய் தந்த நிலையில் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இதனை சிவா தர மறுத்த நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த வசந்த், விக்னேஷ் உட்பட அவரது நண்பர்கள் 5 பேரும் சிவாவை தாக்கியுள்ளதாக தெரிகிறது. அத்துடன் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிவாவை தாக்கியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனைக் கொண்டு சிவா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த வசந்த் விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.