இறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை

இறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை
இறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை
Published on

இறுதிச் சடங்கிற்கு பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் சின்னகாளி பாளையத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருக்கு கோபால கிருஷ்ணன் என்ற மகனும், செல்வி, சாந்தி என்ற இரு மகள்களும் உள்ளனர். கணவனை இழந்த மூத்த மகள் செல்வியும், மகன் கோபால கிருஷ்ணனும் துரைராஜுடன் இருந்த நிலையில், இளையமகள் சாந்தி இடுக்குவாய் கிராமத்தில் வசித்து வருகிறார்.  

நேற்று திடீரென தங்கை சாந்தியின் வீட்டிற்குச் சென்ற கோபால கிருஷ்ணன், அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். சாந்தி காரணம் கேட்டதற்கு, அவசரச் செலவுக்காக இந்தப் பணம் உனக்கு நிச்சயமாக தேவைப்படும் எனக் கூறிவிட்டு, கோபால கிருஷ்ணன் வீடு திரும்பிவிட்டார். அண்ணன் அன்பாக கொடுத்த பணத்தை வேண்டாம் என சொல்ல மனமில்லாத சாந்தி அதைப் பெற்றுக் கொண்டார். 

ஆனால், தனது வாழ்நாளில் மறக்கமுடியாத துயர சம்பவம் நேரப்போவது சாந்திக்கு தெரியவில்லை. பணம் கொடுத்துவிட்டுச் சென்ற கோபால கிருஷ்ணனின் வீட்டில் இருந்து வெகுநேரமாக யாரும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் கோபால கிருஷ்ணனும், அவரின் தந்தை துரைராஜும், மூத்த மகள் செல்வியும் இருந்துள்ளனர்.

தந்தையும் மகனும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைய மகள் சாந்தியை தவிர்த்து, துரைராஜின் குடும்பமே தற்கொலைக்கு முடிவுக்கு வர காரணம் என்ன? தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவர்கள், சொந்த பணத்திலேயே தங்களின் இறுதிச் சடங்கு நடைபெற வேண்டுமென நினைத்தார்களா? இப்படி உளவியல் சிக்கல் நிறைந்த பல கேள்விகளுக்கு, விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காவல்துறை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com