திருப்பூரில் கிளி ஜோசியர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியாக சில பதறவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மங்களம் பாரதி புதூரைச் சேர்ந்தவர் கிளி ஜோசியர் ரமேஷ் என்ற குமார். இவர் திருப்பூர் குமரன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், அரிவாளால் ஜோசியரை வெட்டினார். பின்னர் கீழே விழுந்தவரை தொடர்ந்து சரமாரியாக வெட்டியதில், கிளி ஜோசியர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து கொலை செய்த நபர் தாம் கையில் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்காக விட்டுவிட்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். அந்தத் துண்டு பிரசுரத்தில், ஜோதிடர் ரமேஷ், பூங்காப் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக கிளி ஜோதிடம் பார்த்துவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பூங்காவிற்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்காணித்து தீயசக்தி மூலம் பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கிளி ஜோதிடர் ரமேஷின் பின்னணியில் அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள், நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அத்துடன் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாக்கொண்டு கொலையாளியை தேடி வருகின்றனர். கொலைசெய்யப்பட்ட கிளி ஜோதிடர் மற்றும் அவரது பின்னணி குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.