செய்தியாளர்: இமானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் நெக்னாமலை மலை கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால், பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும் போது, அவர்களை டோலிகட்டி மலை அடிவாரத்திற்கு தூக்கி வந்து, பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.
சாலை அமைக்கக் கோரி மலை கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் முதல் தமிழ்நாடு தலைமை செயலகம் வரை அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ள நிலையில், அதிகாரிகளும் அவ்வப்போது, மலை கிராமத்தை பார்வையிட்டு மட்டுமே செல்கின்றனர்
இதனால் நெக்னாமலை கிராம மக்களே ஒன்றிணைந்து மலை அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிக மண் சாலை அமைத்தனர். இதைத் தொடர்ந்து மலைகிராம மக்கள் படும் துயரத்தை கண்டு சின்னத்திரை நடிகர் KPY பாலா கடந்த ஜனவரி மாதம் நெக்னாமலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் நெக்னாமலை மலை கிராமத்தைச் சேர்ந்த முத்துநாயக்கர் (82) என்பவர் உடல் நலக்குறைவால் வேலூரில் உள்ள அவரது மகள் வீட்டில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உடலை சொந்த கிராமமான நெக்னாமலை கிராமத்திற்கு அவரது உறவினர்கள் KPY பாலா வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அப்போது வாணியம்பாடி மற்றும் நெக்னாமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், அந்த கிராம மக்களால் தற்காலிகமாக போட்டப்பட்ட மண் சாலை சேதமடைந்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது, இதனை தொடர்ந்து முத்துநாயக்கரின் உடலை டோலிகட்டி தூக்கிச் சென்றனர்.
அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் மனம் வந்து மலைகிராம மக்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் இருந்த போது, KPY பாலா ஆம்புலன்ஸ் வழங்கியும், முறையான சாலை வசதியில்லாததால் ஆம்புலன்ஸை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. முறையான சாலை வசதி இல்லாததால் நெக்னாமலை கிராமத்தைச் சேர்ந்த பலர் விவசாய தொழிலை கைவிட்டு தங்களது குடும்பத்தினருடன், வெளியூர்களில் கூலி வேலைக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.