திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரகோவில் அருகே பெங்களூரு - சென்னை செல்லும் ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் மர்ம நர்கள் பெரிய அளவிளான கற்களை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ரயில் மார்க்கத்தில் இன்று காலை மைசூரில் இருந்து ஆம்பூர் வழியாக சென்னைக்குச் சென்ற காவிரி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கற்கள் மீது மோதியுள்ளது.
இதில், பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து ரயிலை இயக்கும் லோகோ பைலட், ரயிலை அருகில் உள்ள பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்பொழுது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது மோதியது தெரியவந்தது, இதையடுத்து உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ரயில் ஓட்டுனர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்தில் விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான காவல் துறையினர் தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து மோப்பநாய்யுடன் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் குழு சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்க உள்ளதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் தெரிவித்தனர்.. இச்சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.