திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே மினி வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
ஜவ்வாது மலையில் உள்ள புலியூர் கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் சேம்பரை கிராமத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆஞ்சநேயர் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக மினி வேனில் புறப்பட்டுச் சென்றனர். வழியில், புதூர் நாடு அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், பூலியூர் கிராமத்தைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரு மகள்களும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.