செய்தியாளர் - ராஜூ கிருஷ்ணா
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டுப் போட்டியில் இளைஞர்களுக்கு இணையாக பெண்கள் இளவட்டக்கல்லை 22 முறை தலையைச்சுற்றி வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் நேரத்தில் சிலம்பம், சடுகுடு, மாட்டுவண்டி போட்டி உள்ளிட்ட விளையாட்டுகள் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இத்தகு விளையாட்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதி கிராமங்களில் இளவட்டக்கல் என்ற வீர விளையாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இளவட்டக் கல்லுக்கு திருமண கல் என்ற பெயரும் உண்டு. முந்தைய காலங்களில் இளவட்டக்கல் என்ற 129 கிலோ எடையுடைய உருளை வடிவிலான இளவட்டகல்லை தூக்கி வீசுகின்ற இளைஞருக்குத்தான் பெண்ணை திருமணம் செய்து வைப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்தப் பழக்கம் நாளடைவில் கைவிடப்பட்டுள்ள போதிலும் இன்றும் சில கிராமங்களில் இளவட்டக்கல் இளைஞர்களின் மன வலிமையையும், உடல் பலத்தையும் சோதிக்கும் அளவீடாக பார்க்கப்படுகிறது. அதிலும் இளவட்டக்கல் என்றாலே திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளைதான் அதற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.
வடலிவிளை கிராமத்தில் ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் முக்கிய போட்டியாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி விறு விறுப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதில் இளைஞர்களுக்கு இணையாக பெண்களும் இளவட்டக்கல்லை தூக்குதல் மற்றும் உரல் மற்றும் இளவட்டகல்லை தூக்கி வீசும் போட்டிகளில் பங்கேற்று தங்களது வீரத்தையும் பலத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கடந்த ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 27 ஆம் ஆண்டு பொங்கல் விழா போட்டிகள் வடலிவிளையில் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி தொடங்கியது. முதலாவதாக ஆண்கள் காதுகளை பிடித்துக் கொண்டு கைகளின் முழங்கைகளை வைத்து உரலை தூக்கி அதிக நேரம் நிறுத்தும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முத்து பாண்டி முதல் பரிசையும், சுடர் 2 ஆம் பரிசையும் பெற்றனர். இதனை அடுத்து இளம்பெண்கள் உரலை தூக்கி பின்பக்கமாக வீசும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் லெஜின் 14 முறை உரலை தூக்கிவீசி முதல் பரிசும் சிந்துஜா 6 முறை உரலை தூக்கிவீசி 2 ஆம் பரிசும் பெற்றனர். பின்னர் நடைபெற்ற 55 கிலோ எடையுடைய இளவட்டக் கல்லை தூக்கி ஒரு கையில் அதிக நேரம் நிறுத்தும் போட்டி நடைபெற்றது. இதில் விக்கி முதல் பரிசும், பாலகிருஷ்ணன் 2 ஆம் பரிசும் பெறறனர்.
அடுத்து பெண்களுக்கான 55 கிலோ எடையுடைய இளவட்டக் கல்லை தூக்கி தலையைச் சுற்றும் போட்டி நடைபெற்றது. இதில் ராஜகுமாரி ஆண்களுக்கு இணையாக இளவட்டக்கல்லை 22 முறை தலையைச்சுற்றி வீசி முதல் பரிசை பெற்றார். தங்கபுஷ்பம் 2 முறை வீசி 2 ஆம் பரிசு பெற்றார். ஆண்களுக்கான 129 கிலோ எடையுடைய இளவட்டக் கல்லை தூக்கி தலையைச்சுற்றி வீசும் போட்டியில் செல்ல பாண்டி முதல் பரிசைப் பெற்றார். மாணவர்களுக்கான 98 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் புவின் முதல் பரிசும் பாரத் 2 ஆம் பரிசும் பெற்றனர்.
பின்னர் விரும்பிய அனைவரும் பங்கேற்கும் 98 கிலோ இளவட்டக்கல்லை தூக்கி தலையைச் சுற்றி வீசும் போட்டியில் செல்ல பாண்டி 13 முறை தலையைச் சுற்றி வீசி முதல் பரிசு பெற்றார். பிரதீஸ்வரன் 11 முறை தலையைச் சுற்றி வீசி 2 ஆம் பரிசு பெற்றார். பின்னர் 114 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் செல்ல பாண்டி முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து கோலப்போட்டி, 400 மீட்டர் ஓட்டம் போன்றவையும் நடந்தன.