திருநெல்வேலி: முழு ஊரடங்கை மீறி நடந்த பெருமாள் கோவில் தேரோட்ட திருவிழா!

திருநெல்வேலி: முழு ஊரடங்கை மீறி நடந்த பெருமாள் கோவில் தேரோட்ட திருவிழா!
திருநெல்வேலி: முழு ஊரடங்கை மீறி நடந்த பெருமாள் கோவில் தேரோட்ட  திருவிழா!
Published on

நான்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, முழு ஊரடங்கையும் மீறி கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்நிலையில், தினமும் எவ்வித கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் பின்பற்றாமல் காலை மற்றும் மாலை நேரங்களில் மாடவீதிகளில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில், முழு ஊரடங்கு நாளான இன்று பத்தாம் திருநாளையொட்டி தேர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு உரிய அனுமதி கிடைக்காததால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்திய பின் கோவிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர், ஜீயர் தலைமையில் பெருமாள் கோவில் நிர்வாகம் திருவிழாவை நடத்தியது. 

இதற்காக கிராமத்தினர் கோவில் முன்பு அதிகாலையிலேயே கூடினர். அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் முகக்கவசம் அணியாமல் கொரோனா பயமின்றி தாரை தப்பட்டை முழங்க துள்ளிக் குதித்து ஆடிப்பாடி திருவிழாவை கொண்டாடினர். அப்போது கொரோனா முழு முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய போலீசார் திருவிழாவில் கலந்து கொண்ட கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் கூட்டத்தினரோடு நின்று வேடிக்கை பார்த்து வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

மேலும் திருவிழா காட்சிகளை பலர் பதிவேற்றம் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், இந்த திருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தினரால் மேலும் கொரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com