நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில், பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்கினை உயர்நிதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ள உயர்நிதிமன்ற கிளை, மனுதாரர்கள் இரண்டு பேரும் விபத்து நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே பொறுப்பேற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடியிருந்ததால் சுவரின் தரம் பற்றி மனுதாரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விபத்திற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது என தெரிவித்துள்ளது.
முன்னதாக திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி காலை கழிவறைச் சுவர் இடிந்து விழுந்தது. அதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின்றி ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இவர்கள் தவிர சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய 4 மாணவர்களும் படுகாயமடைந்தனர்.
இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.