திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பையில் இருந்து அரிவாள் பறிமுதல் - 2 பள்ளி மாணவன் உட்பட 3 பேர் சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!!
நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய சோதனையில் புத்தக பையில் இருந்து சிக்கிய அரிவாளால் பரபரப்பு ஏற்பட்டது.
சகமாணவர்களுக்குள் இருந்த பிரச்சனை காரணமாக பள்ளிக்கு அரிவாள் எடுத்து வந்த மாணவன் உள்ளிட்ட 2 மாணவர்கள் மற்றும் ஒரு இளஞ்சிறார் என 3 பேரை தாழையூத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
நெல்லை மாவட்டம் தாழையூத்துப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் சீரான இடைவெளியில் மாணவர்களின் புத்தகப்பை உள்ளிட்டவைகளை சோதனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாணவர்களின் புத்தகப் பையை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டபோது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் பையில் அரிவாள் இருந்ததை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை தலைமையாசிரியரிடம் தெரிவிக்க அவர் தாழையூத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரிவாள் எடுத்து வந்த மாணவர் மற்றும் அவருடனான தகராறில் ஈடுபட்ட சக மாணவர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களுடன் காவல் நிலையத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் இரண்டு மாணவர்களுக்குள்ளும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் மாணவரை மிரட்டுவதற்கு புத்தக பையில் வைத்து அரிவாளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டு மாணவர்களிடமும் புகாரை பெற்று மனு ஏற்பு ரசீதை பதிவு செய்தனர்..மேலும் தகராறு ஈடுபட்ட ஒரு மாணவனுக்கு மற்றொரு இளம் சிறார் உதவியாக இருந்ததாக தெரிகிறது.
இருவரும் இணைந்து பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்த மாணவனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மூவரையும் இளஞ்சிரார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணை மேற்கொண்ட சிறார் குழும நீதிபதி மூவரையும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிட்டார்