நெல்லை: பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை

நெல்லை: பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை
நெல்லை: பொங்கல் கரும்பு விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை
Published on

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், நெல்லையில் இறக்குமதி செய்த கரும்பு எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் மிக விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. விவசாயிகளையும், விளைவித்த பொருட்களையும் மதிக்கும் திருநாள். நம் மண்ணில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் பொருட்களான சிறுகிழங்கு, பனங்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு கிழங்கு வகைகளையும், கரும்பு, மஞ்சள் குலை போன்ற விளை பயிர்களையும் மக்கள் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வணங்கி பொங்கல் வைத்துக் கொண்டாடுவர்.

இதில் முக்கிய இடம் பிடிக்கும் கரும்பு, தேனி மாவட்டத்தில் மானாவாரி நிலத்தில் மண்ணில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரை குடித்துக்கொண்டு மண்ணின் கனிமங்களை தன்னுள் சேர்த்து சத்தான இனிப்பான கரும்பாய் விளைந்து நிற்கும். இதனாலேயே இதற்கு எப்போதும் நெல்லை மாவட்ட மக்களிடையே மிகப் பெரும் மவுசு உண்டு. ஆண்டுதோறும் இதற்காகவே பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாக தேனி மாவட்டத்திலிருந்து கரும்புகளை இறக்குமதி செய்து விடுவார்கள் வியாபாரிகள்.

இந்த முறையும் வழக்கம்போல் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே கரும்பை கொண்டுவந்து கடை வைத்தபோதும், வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். குறிப்பாக நெல்லை மாநகர பகுதிகளான டவுன் நயினார் குளம் ரோடு, மேலப்பாளையம் சந்திப்பு, பாளையங்கோட்டை போன்ற இடங்களில் விற்பனைக்காக கரும்பு கட்டுகளை அடுக்கி வைத்துள்ளனர். 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கரும்பு விற்பனை குறித்து வியாபாரிகள் தெரிவிக்கும்போது, கடந்த வருடம் மழை காரணமாக விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் கரும்பு வரத்து அதிகமாக இருப்பதால் விலையும் குறைவாக உள்ளது. வழக்கமாக டவுன் மேல ரத வீதியில் விற்பனை செய்து வந்தோம். இந்த வருடம் அதிகாரிகள் நயினார் குளம் பகுதியில் இடம் ஒதுக்கி உள்ளதால் பொதுமக்கள் எளிதாக வந்து வாங்கி செல்ல முடியவில்லை. இதனால் கரும்பு கொண்டு வந்து மூன்று நாட்களாகியும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடைபெறவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்

கரும்பை வாங்கி சென்ற மக்கள் சிலர் தெரிவிக்கும் போது, கரும்பின் விலை இந்த வருடம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். கடந்த வருடம் 350 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். தேனியிலிருந்து வந்த கரும்பிற்கு விலை குறைவாக உள்ளது. இடம் மாறி விற்பனை செய்வதால் கரும்பை எடுத்து செல்வதில் எங்களுக்கு சிரமம் உள்ளது என தெரிவித்தனர்.

-நாகராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com