திருநெல்வேலி மேலகருங்குளம் அசோகபுரம் தெருவைச் சேர்ந்த லெலின் என்பவர் கடந்த 07.10.2019 அன்று பெட்ரோல் பங்க்கில் ரூபாய் 100/-க்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளார். அன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 77. 51 பைசா என நிர்வாகம் வசூல் செய்துள்ளது. ஆனால் அன்றைய தேதியில் பெட்ரோல் விலை ரூபாய் 77.35 பைசாவாக இருந்துள்ளது. அதாவது லெலினிடம் கூடுதலாக 21 பைசா வசூல் செய்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 21 பைசா வசூல் செய்திருப்பது முறையற்ற வாணிபம் என அச்சமயத்திலேயே லெனின் தெரிவித்துள்ளார். மேலும் 21 பைசாவை திரும்பத் தருமாறு கேட்டதற்கு பெட்ரோல் பங்க் நிர்வாகம் 21 பைசாவை தர மறுத்துள்ளார்கள்.
இதையடுத்து தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதாக திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தாக்கல் செய்தார் லெனின். இந்த மனுவை விசாரணை செய்த நுகர்வோர் ஆணையத் தலைவர் கிளாஸ்ட் டோன் பிளசிங் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், மனுதாரருக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு ரூபாய் 7000 /-நஷ்ட ஈடாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.