தயிருக்கு ஜி.எஸ்.டி. வரி மற்றும் பார்சல் தொகை வசூலித்த உணவகத்திற்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் மகராஜன் என்பவர் தயிர் வாங்கியுள்ளார். அப்போது தயிரின் விலை 40 ரூபாயுடன் சேர்ந்து ஜி.எஸ்.டி. வரியாக 2 ரூபாயும், பார்சலுக்காக 2 ரூபாயும் என மொத்தம் 44 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் மகராஜன் வழக்கு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் தயிருக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலித்து மகராஜனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவுக்கு 5 ஆயிரம் ரூபாயும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட 4 ரூபாயும் என மொத்தமாக 15 ஆயிரத்து 4 ரூபாய் வழங்க தனியார் உணவகத்திற்கு உத்தரவிட்டது.
ஒருமாத காலத்திற்குள் தொகையை வழங்காவிட்டால் 6 விழுக்காடு வட்டி விதிக்கப்படும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.