செய்தியாளர்: மருதுபாண்டி
திருநெல்வேலியில், சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரைக்கு, மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இலவசமாக வீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒரு லட்சத்தி 17 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டே அவருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி டிபேனிடம் கேட்டதற்கு...
இது தவறான செயல் இதனை திருத்திக் கொள்ள வேண்டும் - ஹென்றி டிபேன்
சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னதுரைக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த ஆசிரியர்களை கொண்டு மருத்துவமனையிலேயே பாடங்கள் நடத்தப்பட்டது. இதனை வரவேற்கிறேன், ஆனால், வருத்தமான ஒரு செய்தியை கேள்விப்படுகிறேன். சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 300 ரூபாய் பெற்றுக் கொண்டே வீடு வழங்கப்பட்டுள்ளது,
குறிப்பாக எஸ்டி, எஸ்சி அட்ராசிட்டி ஆக்ட் படி அவருக்கு நிவாரணமாக கிடைத்த ஒரு லட்சத்து 91 ஆயிரம் ரூபாயில், அரசுக்கு செலுத்த வேண்டிய பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது தவறான செயல். இதனை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். மேலும் வீட்டின் பராமரிப்பிற்காக மாதம் 250 ரூபாய் பணம் பெறப்படுகிறது. அதுவும் தவறானது என்று ஹென்றி டிபேன் தெரிவித்தார்.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இதுகுறித்த உண்மையை அறிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்டபோது... பல்வேறு உதவிகளை மாணவனுக்கு மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. சிறப்பான கல்வி அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சொந்தமாக வீடு இருப்பதால் வேறொரு வீடு வழங்க சட்டத்தில் இடமில்லை என்றாலும் சிறப்பு ஒதுக்கீடாக திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள திருமால் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
13 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அந்த வீட்டிற்கு 12 லட்சம் ரூபாயை மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள பணமும் அவர்களிடம் வசூல் செய்யப்படவில்லை. தன்னார்வலர்கள் சமூக நலனில் அக்கறை கொண்ட நபர்கள் கொடையாளர்கள் மூலமாக பணம் பெறப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
மாணவர் சின்னதுரை சொன்ன அதிர்ச்சி தகவல்
இது தொடர்பாக மாணவன் சின்னதுரையிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு... தனக்கு வந்த நிவாரண நிதியில் இருந்துதான் வீடு பெறுவதற்கு நிதி வழங்கியதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது