திருச்செங்கோடு: 6 ஆண்டுகளாக மருத்துவரே இல்லாமல் இயங்கும் கால்நடை மருத்துவமனை

திருச்செங்கோடு: 6 ஆண்டுகளாக மருத்துவரே இல்லாமல் இயங்கும் கால்நடை மருத்துவமனை
திருச்செங்கோடு: 6 ஆண்டுகளாக மருத்துவரே இல்லாமல் இயங்கும் கால்நடை மருத்துவமனை
Published on
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனையில், கடந்த ஆறு ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் கால்நடை வைத்திருக்கும் விவசாயிகள், பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் அமைந்துள்ளது திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனை. பழமையான இந்த மருத்துவமனை, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கால்நடைகளுக்கான ஸ்கேன் வசதி, ஆப்ரேஷன் தியேட்டர் வசதி என பல்வேறு வசதிகள் உள்ளது. திருச்செங்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் தொடங்கி மாடு, பசு போன்ற விவசாயத்துக்கு தொடர்பான விலங்குகள் வரை அனைத்துமே சிகிச்சைக்கு இங்குதான் அழைத்துவரப்படும். 
இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இம்மருத்துவமனையில் கால்நடை மருத்துவர் இல்லாமல் இருந்து வருகிறது. அவ்வபோது பள்ளிபாளையம், குப்பாண்டபாளையம் பகுதியில் உள்ள பொறுப்பு மருத்துவர்கள் இங்கு வந்து பணியாற்றி வந்துள்ளனர். இருப்பினும் நிறைய நேரம் மருத்துவர் இருக்கமாட்டார் என்பதால் கால்நடைகளுக்கு சிக்கலான நோயோ, அறுவை சிகிச்சையோ, பிரசவமோ நடந்தால் அதனை நாமக்கல் போன்ற 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை சேர்ந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று, அங்குதான் சிகிச்சை பார்க்க வேண்டிய நிலை மக்களுக்கு உள்ளது.
திருச்செங்கோடு மருத்துவமனையில் முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் என மொத்தம் மூன்று பேர் மட்டுமே பணி செய்து வருகிறார்கள். ஆனால் திருச்செங்கோடு சுற்றியுள்ள பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. அப்படியிருக்க, பணியாளர்களுடன் ஒரு மருத்துவர்கூட இல்லை என்பதால், அங்கு பணியில் உள்ள மருத்துவ மேற்பார்வையாளர் - கால்நடை ஆய்வாளர் இருவருமே சிறிய அளவிலான சிகிச்சைகளை மட்டுமே கையாண்டு வருகின்றனர். சிக்கலான சிகிச்சை விஷயங்களை 37 கிலோமீட்டர் தாண்டி உள்ள நாமக்கல் பகுதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு முறையும் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி இறக்கி கொண்டு செல்லும் நிலை அப்பகுதி மக்களுக்கு உருவாகியுள்ளது. ஆனால் அதற்கென தனியாக செலவு செய்ய வேண்டியுள்ளதால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக சொல்கின்றனர். இதற்கான போக்குவரத்து செலவு மட்டும், ரூ.1500 முதல் ரூ.2000 வரை ஆகும் எனவும், இதற்காகவே தாங்கள் தனியாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இவ்விவகாரத்தில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து திருச்செங்கோடு கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து விவசாயி நடேசன் என்பவர் கூறும்போது, “கால்நடை மருத்துவமனையில் பொறுப்பு மருத்துவர் இருப்பதாக கூறி மருத்துவ உதவியாளர்களே மருத்துவம் பார்த்து வருகின்றனர். இது எந்த வகையிலும் முறையான வழிமுறை அல்ல. மருத்துவர் இல்லாமல் கால்நடைக்கு எப்படி மருத்துவம் பார்க்க முடியும்? திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பொறுப்பு மருத்துவர் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை நாங்கள் அவரை பார்த்ததே இல்லை. இங்கு உள்ள முக்கிய ஆவணங்களை மட்டும் அங்கு சென்று கையொப்பம் வாங்கி வந்து விடுகின்றனர்.
ஒரு மருத்துவர் எப்படி இரண்டு இடங்களிலும் மருத்துவம் பார்க்க முடியும்? அறுவை சிகிச்சை பிரிவு, ஸ்கேன் வசதி என அனைத்து வசதிகளும் உள்ள திருச்செங்கோடு அரசு கால்நடை மருத்துவமனைக்கு ‘நிரந்தரமாக ஒரு மருத்துவரை அரசு நியமிக்க வேண்டும்’ என நாங்கள் பலமுறை கோரிக்கை மனுக்களை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்தும், இதுவரை எந்தவித பயனும் இல்லை. இதற்கு மேலும் திருச்செங்கோடு மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்காவிட்டால், விவசாயிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். அரசு விரைந்து மருத்துவரை நியமிக்க வேண்டும்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com