திருச்செந்தூர் காயல்பட்டினம் அருகே 200 மீட்டர் நீள பழங்கால சுவர் போன்ற அமைப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கொற்கை நகரம் 2,800 ஆண்டுகால பழமையானது என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்ததாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி, இறக்குமதி நடந்ததாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இந்த இடம் விளங்கியதாகவும் அறியப்பட்டது.
கொற்கையில், கடந்த 19-ம் நூற்றாண்டில் இருந்து பல கட்டமாக அகழாய்வு நடந்து வந்தாலும், தற்போது நடந்துள்ள அகழாய்வில் பல முக்கியப் பொருள்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் கொற்கைக்கும் பல வெளிநாடுகளுக்கும் வணிகத் தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டணம் அருகே 200 மீட்டர் நீளம் கொண்ட பழங்கால சுவர் போன்ற அமைப்பு கண்டெடுக்கப்பட்டது. மேலும் இந்த சுவர் போன்ற அமைப்பு பழங்கால கொற்கை துறை முகத்துடன் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.