திண்டிவனம் அம்மா உணவகத்தில் பரிமாறிய காலை உணவில் பல்லி இருந்ததால் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை வைரபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (40,) பாஞ்சாலம், பெலாக் குப்பம், புறங்கரை, ரோசனை ஆகிய பகுதியில் இருந்து குமரேசன், பிரசாத், வீர கண்ணன், குழந்தைசாமி, ஜெயந்தி, வெங்கடேசன் ஆகியோர் இங்கு உணவு சாப்பிட்டுவிட்டு கட்டட வேலைக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை இவர்கள் அம்மா உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது ஏழுமலை என்பவர் சாப்பிட்ட உணவில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக ஏழுமலை மற்றும அவருடன் உணவு சாப்பிட்டவர்களை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற சோதனையில் அவர்களுக்கு லேசான வாந்தி மயக்கம் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.