மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழைய குற்றால அருவியில், அண்மையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் பதறியடித்து ஓடும் காட்சிகள் வெளியாகின.
வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் ஒருவனும் உயிரிழந்த நிலையில், அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன. அதன்படி, அந்த அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி வியாபாரிகள், ஆட்டோ ஒட்டுநர்கள் தெரிவித்தனர். குளிப்பதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். பழைய குற்றால அருவியின் பிரதான நுழைவுவாயில் வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், மதுபோதையில் இருப்பவர்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.