கோகுல்ராஜ், யுவராஜ்
கோகுல்ராஜ், யுவராஜ்twitter page

கோகுல்ராஜ் கொலை வழக்கு... கடந்து வந்த பாதை! #VideoStory

சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்டோரின் ஆயுள் தண்டனை தீர்ப்பை இன்று உறுதிசெய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நேரத்தில் இந்த வழக்கு கடந்து வந்த பாதையை இங்கு பார்க்கலாம்.
1.

ரயில் பாதையில் சடலமாய் மீட்கப்பட்ட கோகுல்ராஜ்!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த ஜூன் 23, 2015 மாயமானார். அதற்கு மறுநாள் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அடுத்தடுத்து நடந்த விசாரணையில் ஜூன் 23 அன்று, கடைசியாக கோகுல்ராஜ் தன்னுடன் படித்த மாணவியொருவரை (வேற்று சமூகத்தை சேர்ந்தவர்) கோயிலில் சந்தித்தது தெரியவந்தது. கோயிலில் சிலர் கோகுல்ராஜிடம் தகராறில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையொட்டி வழக்குப்பதியப்பட்டது.

2.

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை

இந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள் செந்தில், கார் ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா செப்டம்பர் 18, 2015-ல் அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். பின் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட கோகுல்ராஜ் வழக்கில் நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 1,318 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

3.

யுவராஜின் நிபந்தனை ஜாமீனுக்கு இடைக்கால தடை

இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜூக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின் அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதன்பின் குற்றம்சாட்டப்பட்ட பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் 2017ஆம் ஆண்டு உயிரிழந்தனர். இதற்கிடையே கைதுக்கு எதிராக அவர்கள் தரப்பு மேல்முறையீடு மனுவை தொடர்ந்தது.

4.

வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல்!

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய், சகோதரர், தோழி என மொத்தம் 106 பேர் அரசுத்தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு, அவர்களிடம் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா, உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

5.

யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கு விசாரணை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு விசாரணை நடைபெற்று கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அருணுக்கு மூன்று ஆயுள் தண்டனை அதாவது சாகும்வரை சிறை தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரவி, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும், கிரிதருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

6.

தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு!

தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு வீடியோவில் இருக்கும் பெண் தான் இல்லை, தெரியாது, நினைவில் இல்லை என்று பதில் கூறினார். இதனால் சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு உத்தரவிட்டது.

7.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதன்பின் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அவமதிப்பு வழக்கு மற்றும் மேல்முறையீட்டு வழக்குகள் மீது யுவராஜ் தரப்பு, அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

8. தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றம்!

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேலும் 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com