மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு இதுவரை 3 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுள்ளார். அதில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு விசாரணை ஆணையங்களின் விசாரணை மட்டும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், விசாரணைக்காக இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை ஆணையம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கென 4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 557 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது.