தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி 

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி 
தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி 
Published on

புலிகளின் எண்ணிக்கை உலக அளவில் குறைந்து கொண்டே வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. 

காட்டின் சூழல், உணவுச் சங்கிலியை சமநிலைப்படுத்த, புலிகளைக் காப்பது அவசியமாகியுள்ளது. இதற்கான விழிப்புணர்வுக்காக உலக அளவில் இன்று சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கம்பீரம், மிடுக்கு என்றாலே நம் நினைவுக்கு வருவது புலிகள். ‌இயற்கையை தேக்கி வைத்திருக்கும் வனத்தின் சூழலை, உணவுச் சங்கிலியை சமநிலைப்படுத்துவது புலிகள்தான்‌. நம் நாட்டின் தேசிய விலங்காகவும் இருக்கிறது புலி. ‌உலக அளவில் நகரமயமாக்கலால் காடுகளின் பரப்பு குறைந்து வரும் நிலையில், மீதமிருக்கும் காடுகளையேனும் காப்பது அவசரமும் அவசியமும் ஆகிவிட்டது. காடுகளையும், காட்டின் சூழலையும் பாதுகாக்க, புலிகளை அழியாமல் காத்தால் போதும். இந்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு புலிகள் தினத்தில் தமிழகத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 321 சதுர கிலோ மீட்டராக இருந்த முதுமலை புலிகள் காப்பகத்துடன், இந்த ஆண்டு கூடுதலாக 367 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு இணைக்கப்பட்டுள்ளது. புலிகளின் வாழ்விடம் இரட்டிப்பாகியுள்ளதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு‌ள்ளது.

புலிகள் அதிகம் வாழும் மாநிலங்களில் தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது. 2014ம் ஆண்டு வனத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி  தமிழகத்தில் 229 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2018 புள்ளிவிவரம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் புலிகளின் எண்ணிக்கை 250 ஐ தாண்டிவிட்டதாக புலிகள் பாதுகாப்பு நிறுவனம் உறுதிசெய்துள்ளது. தமிழக வனப்பகுதியில் புள்ளிமான், கலைமான், காட்டெருமை அதிகளவில் இருப்பதால் புலிகளுக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும், அதனால் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும், புலிகளின் எண்ணிக்கை உயரும்போது அவை ஊருக்குள் புகுந்து மனிதர்களைத் தாக்குவது கவலையைத் தருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகள் மட்டும் ‌3 புலிகள் சுட்டுக்கொல்லப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பல புலிகள் விஷம் வைத்தும், கண்ணிகளில் சிக்கியும் கொல்லப்பட்டுள்ளன. அதே நேரம் புலிகளால் தாக்கப்பட்டு மனிதர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஊருக்குள் நுழையும் புலிகளை‌த் தடுக்கவும் கண்காணிக்கவும் அறிவியல் தொழில்நுட்பங்களை கையாள வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் ‌வனவிலங்குகள் - மனித மோதல்கள் குறைத்தால், புலிகளும், மனிதர்களும் தங்கள் சூழலில் நிம்மதியாக வாழ முடியும் எனத் தெரிவிக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com