தேக்கடியில் புலிகள் அருங்காட்சியகம்

தேக்கடியில் புலிகள் அருங்காட்சியகம்
தேக்கடியில் புலிகள் அருங்காட்சியகம்
Published on

தேசியப் புலிகள் ஆணையத்தின் சார்பில் ரூ.4 கோடி செலவில் தேக்கடியில் புலிகள் அருங்காட்சியம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  இந்த ஆண்டு இறுதியில் அருகாட்சியகம் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசியப் புலிகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில், கேரளாவின் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைகளை உள்ளடக்கிய 925 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம். சுமார் 40 முதல் 50 புலிகள் வரை வரை வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ள இந்த புலிகள் காப்பகத்திற்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், குறைந்து வரும் எண்ணிக்கையில் உள்ள புலிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு ஏற்படுத்தும் நோக்கிலும், தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் சார்பில் ”புலிகள் அருக்காட்சியம்” அமைக்க தேசிய புலிகள் ஆணையம் அனுமதியளித்து நான்கு கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. இதற்காக தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வனத்துறைக்கு சொந்தமான 40 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் இருந்த 60 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய “புலிகள் அருகாட்சியகத்திற்கான பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டன. திட்டப்படி புலிகள் அருங்காட்சியகம் நான்கு மாடிகள் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அருங்காட்சியகத்தில் புலிகள் குறித்த காட்சிப்பதிவுகள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடுவதற்கான திரையரங்கு, வனத்திற்குள் சென்ற திருப்தியை அளிக்கும் சாரல் மழை, காற்று ஆகியவற்றுடனான ”கிராஃபிக்ஸ்” அரங்கு போன்றவையும் உருவாக உள்ளன. அதோடு, புலிகள் குறித்த அனைத்து வரலாறுகளையும் விளக்கும் புத்தகம், புகைப்படம், கருத்து சித்திரம், ஓவியம் போன்றவையும், புலியின் எலும்புக்கூடுகள், தோல் ஆகியனவும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. 


இந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் திறப்பு விழா காண ஏற்பாடுகள் நடந்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com