காலில் காயத்துடன் திரியும் புலி - அச்சத்தில் மக்கள்..!

காலில் காயத்துடன் திரியும் புலி - அச்சத்தில் மக்கள்..!

காலில் காயத்துடன் திரியும் புலி - அச்சத்தில் மக்கள்..!
Published on

நீலகிரியில் காய்கறி தோட்டத்திற்குள் புகுந்து சுருக்குக் கம்பியில் சிக்கித் தப்பிய புலியைப் பிடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டிப் பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே விவசாயிகள் சுருக்குக் கம்பிகள் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டப்பகுதிக்குள் புகுந்த புலி ஒன்று, வன விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுருக்குக் கம்பியில் மாட்டிக்கொண்டது.

வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை மீட்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது புலி தனது வலது காலை கம்பியில் இருந்து விலக்கிக்கொண்டு தப்பி ஓடியது. வனத்துறையினர் புலிக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்குமா ? என்று புலியை வனப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் புலி அகப்படவில்லை.

மேலும் மூன்று இடங்களில் கேமராவை வைத்து அதில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதிலும் புலி சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேற்று மாலையும், இன்று காலையும் ட்ரோன் கேமரா மூலம் புலியினை தேடினர். ஆனால் ட்ரோன் கேமராவிலும் புலி இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதனால் புலி அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, புலி தங்கள் பகுதியில் தான் சுற்றித்திரிவதாகவும், அதனை விரைந்து பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். காலில் காயம் இருக்கும் அந்தப் புலி வேட்டையாட முடியாத காரணத்தால், மனிதர்களைத் தாக்குவதற்குள் அதனைப் பிடித்து சிகிச்சை அளித்து, வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com