புதியதலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் 100 பேருக்கு உதவுவதற்காக தலா 10 கிலோ எடை கொண்ட 100 அரிசி பைகளை வழங்கியுள்ளார் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிஜு பாஸ்கர்.
கொரோனா பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும், அவர்களுக்கு உதவி செய்ய முன்வருவோரையும் இணைக்கும் பாலமாக புதியதலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி இருந்து வருகிறது.
தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் உதவி கேட்டும், ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்தவண்ணமும் உள்ளனர். இந்த அறிவிப்பைப் பார்த்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சிறுதொழில் முனைவோரான பிஜு பாஸ்கர், தன்னால் முயன்ற உதவியைச் செய்ய முன்வந்தார்.
கொரோனோ நேரத்தில் அதிகமானவர்கள் உணவின்றி தவித்து வரும் சூழலில், அவர்களுக்கு உதவும் வகையில், தலா 10 கிலோ அரிசி கொண்ட 100 பைகளை புதியதலைமுறை அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கிறார். இவற்றை உரியவர்களுக்கு வழங்கும் பணியை புதியதலைமுறை குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவி கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள். உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும்.