“தனது பொறுப்பு என்னவென ‘ரஜினி’க்கு தெரியும்” - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

“தனது பொறுப்பு என்னவென ‘ரஜினி’க்கு தெரியும்” - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

“தனது பொறுப்பு என்னவென ‘ரஜினி’க்கு தெரியும்” - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி
Published on

தனக்கு முன்னே உள்ள பொறுப்பு என்ன என்பதை நடிகர் ரஜினிகாந்த் அறிவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் 50ஆம் ஆண்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, இந்தியாவில் முழுமையான இந்து மாநிலம் தமிழ்நாடு தான் என தெரிவித்தார். ஆனால் தமிழக இந்துக்கள், அரசியல் ரீதியாக இந்துக்களாக இல்லை என குறிப்பிட்டார்.

 எம்.ஜி.ஆர் நாத்திக அரசியலின் முதுகெலும்பை உடைத்தவர் என்றும், இந்து எதிர்ப்பு நிலை தமிழகத்தில் இருப்பதாக சொல்வது ஏற்புடையதல்ல எனவும் கூறினார். அதேசமயம் தனக்கு முன்னே இருக்கும் பொறுப்பு என்னவென்பது ரஜினிக்கு தெரியும் எனவும் அவர் கூறினார். தற்போதைய நிலையில் தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்துவிட்டது எனவும், காசு கொடுக்காமல் அவர்களால் கூட்டம் கூட்ட முடிவதில்லை எனவும் குறிப்பிட்டார். ஜே.என்.யு-வின் டி.என்.ஏ நாட்டிற்கு எதிரானது என கூறிய குருமூர்த்தி, அது திருத்தப்பட வேண்டிய ஒன்று எனவும், இல்லையென்றால் மூடப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்தார்.

“சோ எதையும் வெளிப்படையாக செய்வார், நான் எதையும் வெளிப்படையாக செய்ய மாட்டேன், அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் பங்கு வகிப்பேனா ? என்பதை இங்கு சொல்ல மாட்டேன்” என குருமூர்த்தி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் இந்திய பொருளாதாரம் நிலை பெறும் என்றார். குடியுரிமை சட்டத்தை மாற்ற வேண்டும் என்று முதலில் சொன்னவர் நேரு என்றும், குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளதாகவும், இது ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com