சென்னையில் நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 188 நாடுகளை சேர்ந்த 2000 மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு தமிழக அரசு 92 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்காக 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு அரங்கமும், 22,000 சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் என இரண்டு பிரம்மாண்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 1400 வீரர்கள் விளையாடும் வகையில் 700 செஸ் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் குடிநீர் வசதி, சாலை வசதி, வீரர்களுக்கான ஓய்வு அறை, கழிப்பறை வசதி, வாகனம் நிறுத்த தனி இடம் என செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வரும் 28ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவுள்ளது. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னைக்கு விமானம் மூலம் வரத்தொடங்கிவிட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் வரவேற்று மாமல்லபுரம் அனுப்பும் பணியில் தமிழக அரசு அதிகாரிகளும், செஸ் கூட்டமைப்பு வீரர்களும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.