ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது. இந்த நிலையில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவார பகுதியில் உள்ள வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர். இதையடுத்து வனத்துறையினர் காலை 6.30 மணிக்கு கதவை திறந்த நிலையில், பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.