திருச்சியில் தடுப்பூசி போட ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்
தடுப்பூசி முகாம்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்ததால், காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபம் மற்றும் தேவர் ஹால் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இன்று கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதில், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகமானதால் கலையரங்க திருமண மண்டப தடுப்பூசி முகாம் பிரதான கதவு மூடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 71 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருச்சிக்கு நேற்று முன்தினம் வந்த 18000 தடுப்பூசிகளில் மீதம் 5000 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. இன்று தடுப்பூசி போட்டால் மீதமுள்ள ஊசிகளும் தீர்ந்துவிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் சாலையில் நின்றவர்களை நாளை வாருங்கள் என காவல் துறையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதேபோல் இன்னொரு தடுப்பூசி முகாம் தேவர் ஹால் பகுதியில் நடைபெறுகிறது. அதில் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்திலேயே நேற்று திருச்சியில்தான் தடுப்பூசி அதிகபட்சமாக போடப்பட்டது.