’4 வருடம் ஆச்சு; படுகொலைக்கு காரணமானவர்கள் கண்டறியப்படவில்லை’ - ஸ்டெர்லைட் போராட்ட குழு

’4 வருடம் ஆச்சு; படுகொலைக்கு காரணமானவர்கள் கண்டறியப்படவில்லை’ - ஸ்டெர்லைட் போராட்ட குழு
’4 வருடம் ஆச்சு; படுகொலைக்கு காரணமானவர்கள் கண்டறியப்படவில்லை’ - ஸ்டெர்லைட் போராட்ட குழு
Published on

”தூத்துக்குடி ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூடு நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. விசாரணை கமிசன்கள், சிபிஐ விசாரண அனைத்தும் முடிவுக்கு வந்து அறிக்கையும் சமர்பித்து விட்டார்கள். ஆனால், இதுவரை படுகொலைகளுக்கு காரணம் யார் என்று அடையாளம் காட்டப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை” என்று ஸ்டெர்லைட் போரட்ட குழுவைச் சேர்ந்த பாத்திமா பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துயர நிகழ்வின் நான்காம் ஆண்டு நாளை நிறைவடைகிறது. இதனையொட்டி, ஸ்டெர்லைட் போரட்ட குழுவைச் சேர்ந்த பாத்திமா பாபு பேசும்போது,

”தூத்துக்குடியின் மண்ணை காக்க பதினைந்து உயிர்களை பலி கொடுத்து உள்ளோம். நாளையுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. விசாரணை கமிசன்கள், சி.பி.ஐ விசாரண அனைத்தும் முடிவுக்கு வந்து அறிக்கையும் சமர்பித்து விட்டார்கள். ஆனால்,இதுவரை படுகொலைகளுக்கு காரணம் யார் என்று அடையாளம் காட்டப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை. தற்போது, ஆலை அடைக்கப்பட்டு இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலை அகற்றுவது நடக்கும்வரை அந்த ஆத்மாக்களுக்கும் சாந்தி கிடைக்காது. எங்களுக்கும் மன நிம்மதி கிடைக்காது.

இந்த 15 உயிர்களுக்கும் எங்கள் மரியாதையை செலுத்தும் விதமாகவும், நினைவுக்கூறும் விதமாகவும் நாளை வழக்கம்போல் நகரின் பல்வேறு பகுதிகளில் மலரஞ்சலியை கல்லறைகளுக்கும் வீடுகளுக்கும் சென்று செலுத்துவதாக உள்ளோம். மேலும், திண்டுக்கல் ஐ.லியோனிக்கு ஒரு கோரிக்கையும் வைக்க உள்ளோம். சிறுபிள்ளைகளாக இருந்தபோது மக்கள் எழுச்சி போராட்டங்களை படித்து இருக்கின்றோம். 25 ஆண்டுகால ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் எழுச்சியாகவே நடந்தது. அந்த போராட்டம் பாடநூலில் வர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம்” என்றார்.

அதேசமயம், “தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை - விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

நாளை தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உட்கோட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளரின் 30 (2) (Police Act) காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வசவப்பபுரம், செய்துங்கநல்லூர், பெரியதாழை, சங்கரன்குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பருத்திக்குளம், சென்னமரெட்டியாபட்டி மற்றும் சவலாப்பேரி உட்பட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு 5 காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 37 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com