தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேசிய பேரிடர் மீட்டு குழுவினர், அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என பலரும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிலையும் அருகே பிளாஸ்டிக் டிரம்களை [பேரல்கள்] வைத்து படகு போல் உருவாக்கியுள்ளனர். அதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை படுக்க வைத்து வெள்ளநீரில் இழுத்து வந்த சம்பவம் காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது.
இதனையடுத்து அவ்வழியே தூத்துக்குடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகள் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா கூறுகையில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரையன்ட் நகர் மற்றும் சிதம்பரநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குப் பால், பிஸ்கட், உணவு பொட்டலங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மருத்துவமனைக்குப் பின்புறமாக பத்துக்கும் மேற்பட்ட அமரர் ஊர்திகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது. என்ன நடக்கிறது என அறிவதற்காக அங்குச் சென்று பார்த்த போது சோனக்கன்காட்டு விளையை சேர்ந்த பார்வதி முத்து என்பவர் அவருடைய உறவினர் முருகேஸ்வரியுடன் மருத்துவமனை வாசலில் காத்திருந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகேஸ்வரியை, பிளாஸ்டிக் டிரம்மை, கட்டிலில் வைத்துக் கட்டி படகு போல் அமைத்து அதன் மீது படுக்க வைத்துத் தள்ளிச் சென்ற காட்சி கண்கலங்க வைத்தது.
பின்னர் அவரிடம் இது குறித்து விசாரித்தோம். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்காகக் காத்திருக்கிறோம். ஆனால் மருத்துவர்களோ, அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கேட்டதற்கு ஸ்கேன் எடுப்பதற்கு இன்னும் 15 தினங்கள் ஆகும் எனத் தெரிவித்தனர். அதனால் வெளியே சென்று பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக் கிளம்பியதாகக் கூறினார்.
இவ்வளவு பிரச்னைகள் நடக்கும் போதும் அவ்வழியே அமைச்சர்களும் அரசு உயர் அதிகாரிகளும் சென்று கொண்டுதான் இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று எட்டிக் கூட பார்க்கவில்லை. அங்கிருந்து தனியார் ஆட்டோ வரவழைத்து அவர்களை வெளியே கொண்டு வந்தோம்” என்றார்.
மேலும் பேசுகையில், “இந்த சமயத்தில்தான் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வந்தார். ‘ஏன் இப்படிச் செல்கிறீர்கள்? ஆம்புலன்ஸ் மற்றும் வேறு வாகனங்கள் எதுவும் அதிகாரிகள் உங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வைக்கவில்லையா?’ என்று கேட்டார். பின்னர் மற்றொரு வாகனத்தை நிறுத்தி, அந்த வாகனத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்றி அனுப்பி வைத்தார்” என்றார்.