தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : 3 தரப்பு வாதங்கள் என்னென்ன?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : 3 தரப்பு வாதங்கள் என்னென்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : 3 தரப்பு வாதங்கள் என்னென்ன?
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த வழக்கில் வேதாந்தா தரப்பும், தமிழக அரசும், இடையீட்டு மனுதாரர் தரப்பிலும் முன்வைத்த வாதங்களை பார்ப்போம்.

வேதாந்தா நிறுவனம்:

2011ஆம் ஆண்டு நீரி எனும் தேசிய சுற்றுச்சூழல் & பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரின் சுற்றுசூழல் மேம்பாட்டுக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ம் ஆண்டுகளில் ஆலையை இயக்குவதற்கான ஒப்புதலை புதுப்பித்த அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் நெருக்கடிக்கு பணிந்து 2018-19ஆம் ஆண்டிற்கான ஒப்புதலை வழங்க மறுத்து ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது.

ஆலையை மீண்டும் இயக்க 1 லட்சத்து 55 ஆயிரம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எந்த ஆவண, ஆதாரங்களும் இல்லாமல் கொள்கை முடிவென கூறி ஆலையை மூட அரசு உத்தரவிட்டது வருந்தத்தக்கது. ஆலையை மூட கொள்கை முடிவு எடுத்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சுடு சம்பவத்தில் 13 பேர் பலியான பிறகு, மக்களை சமாதானப்படுத்தும் நோக்கத்துடனே ஆலையை நிரந்தரமாக மூடி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்று மற்றும் தண்ணீர் மாசு குறைந்துள்ளதாக கூற எந்த ஆதாரம் இல்லை. சிப்காட்டில் 67 தொழிற்சாலைகள் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றச்சூழல் மாசுக்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் ஆலையை மூடுவது தீர்வாகாது. துப்பாக்கி சூடு சம்பவம் தவிர ஆலையை மூட வேறு எந்த காரணமும் இல்லை. ஆலையில் ஜிப்சம் கழிவுக்குட்டை நிரம்பி வருவது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எச்சரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஜிப்சம் கழிவுகள் மாசு ஏற்படுத்தாது என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
விதிமீறல்களை நிரூபிக்காமல் தங்களை தண்டிக்க கூடாது. ஆலையை மூடியதற்கான உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

அரசியல் எஜமானர்களுக்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்கிறது. தூத்துகுடியில் அதிக மாசு ஏற்படுத்திபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆலையை மூட உத்தரவிடும் முன்னர் ஒரு குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஆலையை மூடலாம். அரசியல் காரணங்களுக்காகவோ, அரசியல்வாதிகளோ, ஐஏஎஸ் அதிகாரிகளோ, மாநில அரசோ தன்னிச்சையாக உத்தரவிட முடியாது. ஆலையை மூடும் முடிவு கொள்கை முடிவல்ல, அது அவசர முடிவு. போராட்டத்துக்காக ஆலைகள் மூட உத்தரவிடப்பட்டால், தமிழகத்தில் உள்ள எல்லா ஆலைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்படும். ஆலை மூடப்பட்ட அரசாணையில் எந்த இடத்திலும் மாசு ஏற்பட்டதாகவோ? பாதிப்பு ஏற்பட்டதாகவோ குறிப்பிடப்படவில்லை.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆலையை இயக்க ஒப்புதல் வழங்கலாம் என 2018 பிப்ரவரியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஆலையை இயக்க அனுமதி மறுத்துள்ளது. மத்தியில் 17.33% ஜி.டி.பியும், மாநிலத்தில் 3.3% ஜி.டி.பி வருவாயை ஈட்டும் நிறுவனத்தை மூட மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை. பாத்திமா பாபு, வைகோ உள்ளிட்டவர்கள் உள்நோக்கத்துடன் தொடர்ந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூடுதல் கட்டுப்பாடு விதித்தாலும் அதை பின்பற்ற தயாராக இருக்கிறோம்.

தமிழக அரசு:

2018 ஜனவரி 31ல் ஆலை இயக்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்தபோது, நேரில் ஆய்வு செய்தபோது விதிமுறைகள் பின்பற்றப்படாததால், தொடர்ந்து இயக்கக்கூடாது என ஏப்ரலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 18, 19 தேதிகளில் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆலையை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்ததால், ஆலையை மூடவும், மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் 2018 மே 28 நிரந்தரமாக ஆலையை மூட கொள்கை முடிவெடுத்து, ஆலை மூடப்பட்டது. இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. 1,392 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு, 100 கோடி ரூபாய் அபராதம் என்பது, மிகவும் குறைவு என்பதால், ஆலை தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஈட்டிய லாபத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஏற்படுத்திய மாசுவை அரசோ, நீதிமன்றமோ கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே. ஆலை மூடிய பின்னர் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டுள்ளது.

மூன்றாயிரம் கோடி ரூபாய் மூலதன செலவுடன் தொடங்கப்பட்ட ஆலை, கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு தலா 2 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இடையீட்டு மனுதாரர்கள்:

விவசாய நில பகுதியில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது விதிமீறிய செயல். நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், மாசு ஏற்படுத்தவில்லை என தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் கூறுவது தவறான தகவல்.

தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு உடந்தையாக செயல்பட்டது துரதிருஷ்டவசமானது. மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

எந்த முன்னறிவிப்பும் இன்றி தமிழக அரசு தடை உத்தரவை பிறப்பித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. ஆலை மாசு காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வந்துள்ளது.

ஆலை கழிவுகளால் குடிப்பதற்கு உகந்ததற்றதாக தண்ணீர் மாறியுள்ளது. சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழியே இல்லை. மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com