செய்தியாளர்: ராஜன்
கடந்த மாதம் புரட்டாசி மாதம் மற்றும் தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிவடைந்து ஐப்பசி மாதம் பிறந்ததை தொடர்ந்து இன்று சனிக்கிழமை தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் எனப்படும் சீலா மீன் சீசன் துவங்கியுள்ளதால் சீலா மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. சீலா மீன் ஒரு கிலோ 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை ஆனது.
அதேபோல் விளை மீன் கிலோ 400 முதல் 500 ரூபாய் வரையும், ஊளி கிலோ 400 ரூபாய் வரைக்கும், பாறை 350 முதல் 400 ரூபாய் வரையும் மஞ்ச கிளி, வரி கிளி ஆகிய மீன்கள் கூடை 2000 முதல் 2500 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த ஒரு மாதத்திற்கு பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.