எண்பது வயதாகி உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் மக்களுக்கு ஓடி ஓடி சேவையாற்றி வருகிறார் சுல்தான் தாத்தா.
கோயம்புத்தூர் நகரம் முழுவதும் பரபரப்பாக இருந்தாலும் பிக்பஜார் தெருவில் ஒரு வயாதான நபர் பிளாஸ்டிக் விசிலை வைத்துக்கொண்டு வா.. வா... என வாகன ஓட்டிகளை அழைக்கிறார். யார் இந்த முதியவர் என்ற எண்ணம் அங்கு வாகனம் ஓட்டிச்செல்லும் ஒவ்வொருவர் மனதிலும் எழாமல் இல்லை.
அவர்தான் சுல்தான். வயது 82. கோயம்புத்தூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்துகளை சீர்செய்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறார். இவர் அங்குள்ள மசூதி ஒன்றில் துப்புரவாளராக உள்ளார். இரவு நேரங்களில் அங்கேயே தங்கி கொள்கிறார். அவர் மசூதியில் இருந்து வாரத்திற்கு ரூ. 300 பெறுகிறார். அதை தவிர அவருக்கு வேறு வருமானங்கள் இல்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், “காலையில் எனது தொழுகையை முடித்துக்கொண்டு காலை 7 மணி முதல் 10 மணிவரை போக்குவரத்தை சீர் செய்வதற்காக கோயம்புத்தூர் ரயில்வே நிலையத்திற்கு செல்வேன். பின்னர் அங்கிருந்து பிக்பஜார் தெரு அல்லது வேறு எங்கு டிராபிக் அதிகமாக இருக்கிறதோ அங்கு செல்வேன். நான் எங்கும் திட்டமிட்டு செல்வதில்லை. எங்கு டிராபிக் அதிகமாக இருந்தாலும் அங்கு நான் செல்வேன். நடந்தோ அல்லது பேருந்திலோ பயணிப்பேன். இதற்கு முன்னர் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கநல்லூர் மற்றும் பீலமேடுவின் சில பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினேன். அப்போது, நான் காவலர்களைப் பார்த்து ஓடிவிடுவேன். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக, போக்குவரத்து போலீசாருடன் பக்கபலமாக நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தைரியத்தை கற்றுக்கொண்டேன்” என்றார்.
சுல்தானுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். துடியலூரில் மகனும், கவுண்டம்பாளையத்தில் மகளும் வசித்து வருகின்றனர். எனினும் சுல்தான் மசூதியில் தங்க விரும்புவதால் அவர்களை எப்போதாவதுதான் பார்ப்பார். சுல்தான் போலீசாருடன் சேர்ந்து டிராஃபிக் சம்பந்தமான அனைத்து விதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டுள்ளார். 82 வயதாகியும் சுல்தான் இன்னும் கண்ணுக்கு கண்ணாடி போடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யத்தின் உச்சம். சுல்தானின் இந்த சேவை மனப்பான்மையை அனைத்து போலீசாரும் பாராட்டுகின்றனர்.
இதுகுறித்து பஜார் காவல்நிலையத்தின் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், சேகர் கூறுகையில், “போலீஸ் இருந்தாலும் இல்லையென்றாலும் சுல்தான் அங்கு இருப்பார். நாங்கள் அவருக்கு ஒரு சீருடையும் வழங்கினோம். ஆனால் சுல்தான் பொதுமக்களில் ஒருவராகவும் காவல்துறைக்கு உதவியாளராகவுமே இருக்க விரும்புகிறார்” எனத் தெரிவித்தார்.
தாத்தா சுல்தானிடம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் அவரை தனியாக சென்று இந்த போக்குவரத்து பணியில் ஈடுபடாதீர்கள் என்று கூறுகிறார்கள். ஆனாலும அவர் அதைத்தான் தொடர்கிறார். ஏன் என்று கேட்டால், “ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இதை எனது சொந்த நலனுக்காவே செய்கிறேன்” என்கிறார் சுல்தான் தாத்தா.