சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் சிறைக்கு செல்வதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவை என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த 2016ஆம் ஆண்டு 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்றிரவே நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். இருப்பினும், ஜெயலலிதாவின் இறுதி நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது சசிகலா தலைமையில்தான்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் என பலர் சசிகலாவைச் சந்தித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. நாட்கள் கடக்க 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வானார்.
அடுத்த இரு தினங்களில் அதிகமுகவில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்த நாள் அதிமுக இரண்டாக பிளவுபட்டது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சசிகலா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதுடன் 10 கோடி ரூபாய் அபராதமும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனால் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் மாளிகையில் முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார்.
பின்னர் பிப்ரவரி 15ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றார் சசிகலா.
அதன்பிறகு தனது கணவர் நடராஜன், மருத்துவமனையில் இருந்து போது பரோலில் வெளியே வந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு நடராஜன் இறந்ததற்காக சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதற்கிடையே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி தினகரன் தனியாக கட்சி தொடங்கியதும் நிகழ்ந்தது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சசிகலாவின் தண்டனை காலம் நிறைவடைந்து அவர் விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.