திருத்துறைப்பூண்டி அருகே சுடுகாட்டிற்கு பாதை வசதி கோரி பாடையுடன் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரகுடி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் குறிப்பிட்ட தூரம் வரை சடலத்தை தூக்கிக் கொண்டு வயலில் இறங்கி ஊர்வலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று சிவன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி முனியம்மாள் (75) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். இந்தநிலையில் சுடுகாட்டிற்குச் செல்ல உடனடியாக சாலை வசதி செய்து தரவேண்டும் என வலியுறுத்தி திடீரென திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் மற்றும் வட்டாட்சியர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடனடியாக சாலை வசதி செய்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி - திருவாரூர் இடையே சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.