திருவாரூர்: ஆட்சியர் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு இடைஞ்சல் தந்த 120 மாடுகள் கைது

திருவாரூர்: ஆட்சியர் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு இடைஞ்சல் தந்த 120 மாடுகள் கைது
திருவாரூர்: ஆட்சியர் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு இடைஞ்சல் தந்த 120 மாடுகள் கைது
Published on

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் - மாவட்ட மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட தண்டலை ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்களில் சாலைகளில் சுற்றித் திரிந்த 120 மாடுகள் தண்டலை ஊராட்சி நிர்வாகத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதாக மாவட்ட ஆட்சியருக்கு கடந்த சில தினங்களுக்கு தொடர் புகார்கள் வந்துக்கொண்டிருந்தது. அப்புகார்களில் முக்கியமாக, ‘சுற்றித்திரியும் மாடுகளால், பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒருவரும், கடந்த 2020ஆம் ஆண்டில் ஒருவரும் சாலையில் செல்லும்போது மாடுகள் மீது மோதி உயிரிழந்துவிட்டனர். இதனால் மாடுகளை மாலை இரவு நேரங்களில் சாலைகளில் நிற்க விடாமல் அப்புறப்படுத்த வேண்டும்” என்று பொதுமக்கள் தரப்பில் ஆட்சியருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி தண்டலை ஊராட்சி நிர்வாகத்தினர் தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த மாடுகளை மாலை 5 மணிக்குள் உரிமையாளர்கள் வீட்டுக்கு ஓட்டிச் செல்ல வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினர். அப்படி ஓட்டி சொல்லப்படாத மாடுகளை தண்டலை ஊராட்சி நிர்வாகத்தினர் கைது செய்து மாவட்ட ஆட்சியர் வளாகம் அமைந்துள்ள இடத்தில் அடைந்துள்ளார்கள். இதன்படி தற்போதைக்கு 120 மாடுகள் கைது செய்யப்பட்டுள்ளது. இவற்றை அதன் உரிமையாளர்கள் வந்து பெற்றுக்கொள்ளும்போது சிறிய மாடுகளுக்கு கன்று குட்டிகளுக்கு 250 ரூபாய் அபராதமும், பெரிய மாடுகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

மாட்டின் உரிமையாளர்கள் இதுபற்றி பேசுகையில், “நேற்று மாலை திடீரென்று சொல்லிவிட்டு எங்களுக்கு நேரம் கூட கொடுக்காமல் எங்கள் மாடுகளை அழைத்து வந்து விட்டார்கள்” என்று புகார் கூறினார்கள். மேலும் இந்த ஒரு முறை அபராதம் இல்லாமல் எங்களுக்கு மாடுகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

இதற்கிடையே இப்பகுதியில் மட்டுமன்றி, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து விளமல் வழியாக தேவர்கண்டநல்லூர் வரை இரவு நேரங்களில் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி திரிகின்றன என்றும், அவற்றாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன எனவே அவற்றையும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com