நேற்று கனமழை.. இன்று நெல் பழம் நோய் தாக்குதல் - கவலையில் திருவாரூர் விவசாயிகள்
திருவாரூர் மாவட்டத்தில், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரில் நெல் பழம் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால், அண்மையில் பெய்த கனமழை காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட, பயிர்கள் மழை நீரில் மூழ்கி முளைத்துவிட்டன. தற்போது மீதமுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மன்னார்குடி, கோட்டூர், திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கச்சனம், மாவூர் உள்ளிட்ட பல இடங்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களில் நெல் பழம் மற்றும் பூஞ்சான் கொல்லி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகசூல் இழப்பு ஏற்படும் என கவலை அடைந்துள்ளனர்.
முன்னதாக, மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த நோய் தாக்குதல் விவசாயிகளை மேலும் வேதனையடைய செய்துள்ளது. இந்த ஆண்டு இனி எதுவும் செய்ய முடியாத நிலையில் வருங்காலங்களில் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் நெல் விதைகளை நேர்த்தி செய்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.