செய்தியாளர்: புருஷோத்தமன்
திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் நெல் மகசூலில் முதலிடம் வகிக்கிறது. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக கொண்ட வன்னியந்தாங்கல் கிராமத்தில் விவசாயிகள் கார்த்திகை பட்டத்தில் நாற்று முறை மற்றும் நேரடி விதைப்பு முறையில் நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மூன்று பேர் நேரடி நெல் விதைப்பு முறையில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் விதைத்த கோ-51 ரக நெல் விதைகள் ஒரு சதவீதம் கூட முளைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேற்றில் விதைத்த நெல்மணிகள் மூன்றாவது நாளிலேயே தூர் வெடித்து முளைக்க ஆரம்பித்துவிடும். நான்காவது, ஐந்தாவது நாளில் பயிர் தண்ணீருக்கு மேலே நன்றாக தெரியவரும். ஆனால், விதைத்து ஐந்து நாட்கள் ஆகியும் ஒரு சதவீதம் நெல் கூட முளைக்கவில்லை. விதைத்தது விதைத்தபடியே நெல்லாகவே உள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் பத்து ஆயிரம் ரூபாய் செலவு செய்து நிலத்தை உழுது பண்படுத்தி நெல்லை விதைத்த நிலையில் ஒன்று கூட முளைக்காததால் வேதனையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜா அக்ரோ ஹைடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில், தமிழக அரசு தரச்சான்று அளித்துள்ள கோ-51 ரக நெல் விதைகளை செய்யார் பஜார் வீதியில் உள்ள தனியார் உரக்கடையில் 30 கிலோ எடைகொண்ட சிப்பம் ஒன்றை 1230 ரூபாய்கு வாங்கினோம். இதையடுத்து ஏக்கருக்கு 20 கிலோ வீதம் முளைகட்டி வயலில் விதைத்தோம்.
ஆனால், அது முளைக்காததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விதை வாங்கிய கடைக்காரரிடமும், தயாரித்து வழங்கிய நிறுவனத்திடமும் கேட்டதற்கு விதை முளைக்காதது எங்கள் தவறல்ல நீங்கள் ஏதாவது தவறு செய்திருப்பீர்கள் என்று அலட்சியமாக பதிலளித்தார்கள் என்று வேதனை தெரிவித்தனர்.
ஒரு விவசாயி விதைத்த நெல் மணிகள் முளைக்கவில்லை என்றால் விவசாயி விதைப்பில் தவறு செய்திருக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் மூன்று விவசாயிகள் 15 ஏக்கர் பரப்பளவில் விதைத்த நெல்மணிகளில் ஒன்று கூட முளைக்காத பட்சத்தில் விவசாயி மீது தவறு கூறுவது எவ்விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே வேளாண்துறை அதிகாரிகள் வயலில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு முளைப்புத் திறன் குறைந்த நெல்மணிகளை விற்பனை செய்த தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் அதனை விற்ற விநியோகஸ்தர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை அந்நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். வட்டிக்கு கடன் வாங்கி உழவு செய்யும் விவசாயிகள், இது போன்று வேறு யாரும் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.