திருவண்ணாமலையின் அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில், பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதிகாலை 4 மணியவில், கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அனேகன் ஆகி, அனேகன் மீண்டும் ஏகன் ஆக மாறுவதுதான் பரணி தீபம் சொல்லும் வாழ்வியல் தத்துவம். அதற்கேற்றாற்போல், ஒரு தீபத்தில் இருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு, பின்னர் அந்த தீபத்திலிருந்து ஒரே ஒரு தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சில நொடிகள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளுவார். மேலும் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர். இதைக்காண திருவண்ணாமலையில் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்றும் இவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவருக்கு வேண்டிய வசதிகளை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் செய்து வருகிறது.