செய்தியாளர்: எழில் கிருஷ்ணா
_____________
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா (32). இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய கணவர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர். வெங்கடேசன், காஷ்மீர் ரெஜிமென்ட் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால் பேரம்பாக்கத்தில் உள்ள தமது தாய் வீட்டில் தங்கியுள்ளார் ஷர்மிளா.
ஷர்மிளா, தங்கள் வீட்டின் ஷெட்டில் தனக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனம், மற்றும் தன் அண்ணனின் வாகனங்கள் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர் ஆகியவற்றை நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கிருந்த வாகனங்கள் திடீரென எரிந்துள்ளன. இதை கண்ட ஷர்மிளா, அதிர்ச்சியடைந்து இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்குள் 2 கார்கள், 1 டிராக்டர், 7 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இதைத் தொடர்ந்து ஷர்மிளா, மப்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தங்களது வீட்டிற்கு அருகே சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றிக் கொண்டிருந்ததாகவும் யாரோ தீ வைத்திருக்கலாம் என்றும் ₹25 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து நாசமானதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மப்பேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கு சார்ஜ் செய்யும் போது தீப்பற்றி எரிந்திருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.