திருவள்ளூர் கீழச்சேரியில் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக திருவள்ளூர் எஸ்.பி கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருவள்ளூர் அடுத்துள்ள கீழச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், அது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவலை அளிக்கவில்லை எனக் கூறியும், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலையில் அரசுப் பேருந்து சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாணவியின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த தற்கொலை நடந்தது எப்படி? என்பது குறித்த பல விசாரணைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா, திருவள்ளூர் எஸ்.பி கல்யாண் உள்ளிட்டோரும், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி கல்யாண் கூறுகையில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் பற்றி சிபிசிஐடி விசாரணை நடத்தும் என்றும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளபடி விசாரணை நடக்கும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே பள்ளியில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பள்ளி வளாகத்தினுள்ளே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.